வேதாகமத்தை வாசி

ஓசியா 8

                   
புத்தகங்களைக் காட்டு
1எக்காளத்தை ஊது! கழுகு ஒன்று ஆண்டவருடைய வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது: அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்: என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.
2இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, “எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்” என்று சொல்கின்றார்கள்.
3இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்: பகைவன் அவர்களைத் துரத்துவான்.
4அவர்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்: அது என்னாலே அன்று: அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்: அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கெனச் சிலைகளைச் செய்தார்கள்: தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.
5சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்: என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
6அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.
7அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்: கடும்புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை: கோதுமை நன்றாக விளைவதில்லை: அப்படியே விளைந்தாலும் அன்னியரே அதை விழுங்குவர்.
8இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று: இப்பொழுது அவர்கள் வேற்றினத்தார் நடுவில் உதவாத பாத்திரம்போல் இருக்கின்றார்கள்.
9அவர்கள் தனிமையில் திரிகிற காட்டுக் கழுதைபோல் அசீரியாவைத் தேடிப் போனார்கள். எப்ராயிம் மக்கள் தங்கள் காதலர்க்குப் பொருள் கொடுத்து வருகிறார்கள்.
10கைக்கூலி கொடுத்து வேற்றினத்தாரை அவர்கள் துணைக்கு அமர்த்திக் கொண்டாலும், இப்பொழுதே நான் அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன். தலைவர்கள் ஏற்படுத்திய மன்னன் சுமத்தும் சுமையில் சிறிது காலம் துயருறுவார்கள்.
11எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்துகொண்டான்: அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.
12ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.
13பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்: பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்: அவற்றின்மேல் ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை: அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்: அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்: அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.
14இஸ்ரயேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்: யூதாவோ அரண்சூழ் நகர்கள் பலவற்றை எழுப்பினான்: நானோ அவனுடைய நகர்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்: அவனுடைய அரண்களை அது பொசுக்கிவிடும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.