வேதாகமத்தை வாசி

ஏசாயா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.
2'சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது' என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது: உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வுகொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன.
3அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: “நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்:
4“நீ அமைதியாய் இரு: அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்: இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள்.
5சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,
6'யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்: அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்' என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.”
7ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: “அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது.
8ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு: தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்)
9எப்ராயிமின் தலைநகர் சமாரியா: சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள்.”
10ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:
11“உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்: அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.
12அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட.டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.
13அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
14ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
15தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.
16அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.
17எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.
18அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும், அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்:
19உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.
20அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்: அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்: அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.
21அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.
22அவை மிகுதியாகப்பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்: நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும், வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.
23அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள ஆயிரம் திராட்சைச் செடிகள் வளாந்த நிலம் முழுவதிலும் நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.
24நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்போடுமே மனிதர்கள் வருவார்கள்.
25மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில் நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால் அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார். அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்: ஆடுகள் நடமாடும் காடாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.