1 | யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: |
2 | இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். |
3 | வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து “புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்” என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். |
4 | அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். |
5 | யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்: |
6 | யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்: ஏனெனில் கீழை நாட்டுப் போதனை அவர்களிடையே மிகுந்துள்ளது. பெலிஸ்தியரைப் போல அவர்கள் நிமித்தம் பார்க்கின்றார்கள்: வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள். |
7 | அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது: அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை: அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது: அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா. |
8 | அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன: தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்: தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர். |
9 | இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்: மக்கள் சிறுமை அடைவார்கள்: ஆண்டவரே! அவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்: |
10 | கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்: மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்: ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்: |
11 | செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்: ஆணவமிக்கோர் அவமானமடைவர்: ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவோர். |
12 | படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது: அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்: உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும். |
13 | அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும். |
14 | வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும். |
15 | உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்: வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும். |
16 | தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும். |
17 | மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்: அவர்தம் செருக்கு அகற்றப்படும்: ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்: |
18 | சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும். |
19 | ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்: மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர். |
20 | அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர். |
21 | ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்: குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர். |
22 | நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்: அவர்களின் உயிர் நிலையற்றது: ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன? |