1 | ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். |
2 | ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். |
3 | அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்: |
4 | நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். |
5 | நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை. |
6 | அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். |
7 | பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்: அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்: |
8 | பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். |
9 | என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். |
10 | அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்: அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும். |
11 | அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார். |
12 | பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்: இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்: யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார். |
13 | எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும், யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர். எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை: யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை. |
14 | அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்: கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்: ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்: அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள். |
15 | எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்: பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்: கால் நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார். |
16 | இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும். |