1 | இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்: என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்: தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! |
2 | “எழுந்திடுவேன்: நகரத்தில் சுற்றிவருவேன்: தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்: தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்! |
3 | ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன். |
4 | அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்: விடவே இல்லை: என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்: என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன். |
5 | எருசலேம் மங்கையரே, கலைமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர். |
6 | என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்தூண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே! |
7 | அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர். |
8 | அனைவரும் வாளேந்திய வீரர்! அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்! இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத் தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்! |
9 | மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்: சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார். |
10 | அதன் தூண்களை வெள்ளியால் இழைத்தார்: மேற்கவிகை பொன்: இருக்கை செம்பட்டு: உட்புறம் மெல்லிய தோல்மெத்தை: எருசலேம் மங்கையரே, வாருங்கள்! |
11 | சீயோன் மங்கையரே, பாருங்கள்! மன்னர் சாலமோனையும் அவர் அன்னை அவருக்கு அணிவித்த மணிமுடியையும் காணுங்கள்! அவரது திருமண நாளினிலே, அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே, அவருக்கு அணிவித்த முடியதுவே! |