1 | சாலமோனின் தலைசிறந்த பாடல் |
2 | தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக! ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது! |
3 | உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது: உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது: எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர். |
4 | உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்: அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்: திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்: திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்! |
5 | எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்: சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன். |
6 | கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்: நான் கறுப்பானேன்: என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்: திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்: என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்! |
7 | என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்! |
8 | பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ: இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு! |
9 | என் அன்பே, பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன். |
10 | உன் கன்னங்கள் குழையணிகளாலும் உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன. |
11 | பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்: வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம். |
12 | என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே, என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது. |
13 | என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென என் மார்பகத்தில் தங்கிடுவார். |
14 | என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி! |
15 | என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்! |
16 | என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்! |
17 | நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்: நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள். |