1 | “இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்: நெஞ்சே! நீ வா!” என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன். |
2 | சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்: |
3 | இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்: மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்: |
4 | பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்: எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன். |
5 | எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்: |
6 | தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்: |
7 | ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்: என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்: ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை. |
8 | வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன். |
9 | இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை. |
10 | என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும். |
11 | நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்: முற்றும் பயனற்ற செயல்களே. |
12 | நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராய்த்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்? |
13 | ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன். |
14 | ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன். |
15 | மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன். |
16 | ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்? |
17 | எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்: யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். |
18 | நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும். |
19 | அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்: யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர். |
20 | என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன். |
21 | ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. |
22 | இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன? |
23 | வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்: வேலையில் தொந்தரவு: இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே. |
24 | உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன். |
25 | அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்? |
26 | கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்: ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். |