1 | ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. |
2 | பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்: |
3 | கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்: |
4 | இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்: |
5 | கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்: |
6 | தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்: |
7 | கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்: |
8 | அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். |
9 | வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? |
10 | மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். |
11 | கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்தியிருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது. |
12 | எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன். |
13 | உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை. |
14 | கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார். |
15 | இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார். |
16 | வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது. |
17 | “கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். |
18 | “மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். |
19 | மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது: மனிதரும் மடிகிறார்: விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை: எல்லாம் வீணே. |
20 | எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும். |
21 | மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்? |
22 | ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை. |