1 | பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, |
2 | என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். |
3 | ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. |
4 | செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. |
5 | அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். |
6 | ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே. |
7 | நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்: மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார். |
8 | நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்: தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார். |
9 | எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய். |
10 | ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்: அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும். |
11 | அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்: மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும். |
12 | நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும். |
13 | நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும். |
14 | அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள். |
15 | அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை. |
16 | ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும். |
17 | அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான்”கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள். |
18 | அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன. |
19 | அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை |
20 | எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக! |
21 | நேர்மையாளரே உலகில் வாழ்வர்: மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர். |
22 | பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்: நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர். |