1 | கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்: கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும். |
2 | ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்: மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும். |
3 | ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்: நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும். |
4 | சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது: வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும். |
5 | தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்: கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர். |
6 | நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்: பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே. |
7 | ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது: மதிகேடரின் உள்ளம் அத்தகையதல்ல. |
8 | பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்: நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும். |
9 | பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு: நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார். |
10 | நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்: கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார். |
11 | பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா? |
12 | ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்புவார்: ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்: |
13 | அகமகிழ்ச்சியால் முகம் மலரும்: மனத்துயரால் உள்ளம் உடையும். |
14 | விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்: மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு. |
15 | ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே: மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே. |
16 | பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல். |
17 | பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல். |
18 | எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்: பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார். |
19 | சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே: சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும். |
20 | ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்: அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான். |
21 | மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்: மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான். |
22 | எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்: பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும். |
23 | தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்: காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது. |
24 | விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல: அது வாழ்விற்கச் செல்லும் பாதையாகும். |
25 | இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்: கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார். |
26 | தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்: மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை. |
27 | வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்: கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார். |
28 | சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்: பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும். |
29 | ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலையில் இருக்கிறார்: தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார். |
30 | இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்: நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும். |
31 | நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார். |
32 | கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்: அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார். |
33 | ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி: மேன்மை அடையத் தாழ்மையே வழி. |