1 | அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்: கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர். |
2 | நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார். |
3 | பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை: நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது. |
4 | பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்: இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள். |
5 | நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை: பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை. |
6 | பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்: நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும். |
7 | பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்றி அழிவர்: நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும். |
8 | மனிதர் தம் விவேத்திற்கேற்ற புகழைப் பெறுவர்: சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர். |
9 | வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல். |
10 | நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது. |
11 | உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்: வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர். |
12 | தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும். |
13 | தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்: நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர். |
14 | ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்: வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார். |
15 | மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்: ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர். |
16 | மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்: விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார். |
17 | உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்: பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர். |
18 | சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்: ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும். |
19 | ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே. |
20 | சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்: பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர். |
21 | நல்லாருக்கு ஒரு கேடும் வராது: பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும். |
22 | பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்: உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். |
23 | விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்: மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர். |
24 | ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்: சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர். |
25 | மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் அவர்களை மகிழ்விக்கும். |
26 | சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்: பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும். |
27 | சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்: விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர். |
28 | நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்: முரணானவரின் வழி சாவில் தள்ளும். |