1 | பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்: பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும். |
2 | மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்: தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார். |
3 | கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்: மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார். |
4 | மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன்றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று. |
5 | பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல: நேர்மையானவருக்கு நீதி கிடைக்காமல் தடுப்பது நேரியதல்ல. |
6 | மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும்: அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும். |
7 | மதிகேடர் தம் வாயால் அழிவார்: அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும். |
8 | புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்: அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள். |
9 | தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன். |
10 | ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை: அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார். |
11 | செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார். |
12 | முதலில் வருவது இறுமாப்பு: அதனை அடுத்து வருவது அழிவு: மேன்மை அடையத் தாழ்மையே வழி. |
13 | வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர்களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும். |
14 | மன வலிமை நோயைத் தாங்கிக்கொள்ளும்: மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்? |
15 | உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்: ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும். |
16 | ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச் சேர்க்கும். |
17 | வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும். |
18 | திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்: வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும். |
19 | உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்: அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான். |
20 | ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்: தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும். |
21 | வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே: வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர். |
22 | மனைவியை அடைகிறவன் நலமடைவான்: அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான். |
23 | ஏழை கெஞ்சிக் கேட்பார்: செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார். |
24 | கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு: உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு. |