1 | மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? |
2 | நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், |
3 | வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. |
4 | படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன், |
5 | புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ். |
6 | என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. |
7 | என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா. |
8 | என்னைக் காணும் கண் இனி என்னைப் பார்க்காது. என் மேல் உம் கண்கள் இருக்கும்: நானோ இரேன். |
9 | கார்முகில் கலைந்து மறைவதுபோல் பாதாளம் செல்வோர் ஏறி வாரார். |
10 | இனி அவர்களது இருப்பிடம் அவர்களை அறியாது. |
11 | ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்: என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்: உள்ளக் கசப்பில் முறையிடுவேன். |
12 | கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா? காவல் என்மீது வைக்கலானீர்! |
13 | “என் படுக்கை ஆறுதல் அளிக்கும்: என் மெத்தை முறையீட்டைத் தணிக்கும்” என்பேனாகில், |
14 | கனவுகளால் என்னைக் கலங்க வைக்கின்றீர்: காட்சிகளால் என்னைத் திகிலடையச் செய்கின்றீர். |
15 | ஆதலால் நான் குரல்வளை நெரிக்கப்படுவதையும் வேதனையைவிடச் சாவதையும் விரும்புகின்றேன். |
16 | வெறுத்துப்போயிற்று: என்றென்றும் நான் வாழப்போவதில்லை: என்னைவிட்டுவிடும். ஏனெனில் என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே. |
17 | மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க? |
18 | காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க? |
19 | எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா? |
20 | மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்? |
21 | ஏன் மீறலை மன்னியாதது ஏன்? என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்? இப்பொழுதோ நான் மண்ணுக்குள் உறங்கப் போகின்றேன்: நீர் என்னைத் தேடுவீர்: நான் இல்லாதுபோவேன். |