வேதாகமத்தை வாசி

யோபு 13

                   
புத்தகங்களைக் காட்டு
1இதோ! இவை என் கண்களே கண்டவை: என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.
2நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்: நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை.
3ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்: கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,
4நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்: நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.
5ஐயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்: அதுவே உங்களுக்கு ஞானமாகும்.
6இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்: என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.
7இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா? அவர்பொருட்டு வஞ்சகமாயப் பேசுவீர்களா?
8கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா?
9அவர் உங்களை ஆராய்ந்தால் உங்களில் நல்லதைக் காண்பாரா? அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா?
10நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால் உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.
11அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா? அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா?
12உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்: உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்மையொத்த வாதங்கள்.
13பேசாதிருங்கள்: என்னைப் பேசவிடுங்கள்: எனக்கு எது வந்தாலும் வரட்டும்.
14என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?
15அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்: இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன்.
16இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்: ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.
17என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்: என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.
18இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்: குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.
19இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது? அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன்.
20எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்: அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன்.
21உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்: உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.
22பின்னர் என்னைக் கூப்பிடும்: நான் விடையளிப்பேன்: அல்லது என்னைப் பேசவிடும்: பின் நீர் மறுமொழி அருளும்.
23என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை? என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும்.
24உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?
25காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ? காய்ந்த சுளத்தைக் கடிது விரட்டுவீரோ?
26கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்: என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்.
27என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்: கண் வைத்தீர் என் பாதை எல்லாம்: காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர்.
28மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்: அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.