வேதாகமத்தை வாசி

யோபு 12

                   
புத்தகங்களைக் காட்டு
1அதற்கு யோபு உரைத்த மறுமொழி:
2உண்மையிலும் உண்மை: நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!
3உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு: உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்: இத்தகையவற்றை யார்தான் அறியார்?
4கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.
5இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்: அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.
6கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!
7இருப்பினும், விலங்கிடம் வினவுக: உமக்கு அது கற்றுக்கொடுக்கும்: வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.
8அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக: அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.
9இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?
10அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன.
11செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?
12முதியோரிடம் ஞானமுண்டு: ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.
13ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!
14இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது: அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.
15இதோ: அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்: வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.
16வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன: ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!
17அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்: நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.
18அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்: அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்:
19குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்: நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்:
20வாய்மையாளரின் வாயை அடைக்கினார்: முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்:
21உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்: வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்:
22புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார். காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.
23மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்: பின்பு அழிக்கின்றார்: மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்: பின், குறையச் செய்கின்றார்.
24மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.
25இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்: குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.