1 | இதோ! இவை என் கண்களே கண்டவை: என் காதுகளே கேட்டு உணர்ந்தவை. |
2 | நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்: நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை. |
3 | ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்: கடவுளோடு வழக்காட விழைகின்றேன், |
4 | நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்: நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள். |
5 | ஐயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்: அதுவே உங்களுக்கு ஞானமாகும். |
6 | இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்: என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள். |
7 | இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா? அவர்பொருட்டு வஞ்சகமாயப் பேசுவீர்களா? |
8 | கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா? |
9 | அவர் உங்களை ஆராய்ந்தால் உங்களில் நல்லதைக் காண்பாரா? அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா? |
10 | நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால் உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார். |
11 | அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா? அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா? |
12 | உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்: உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்மையொத்த வாதங்கள். |
13 | பேசாதிருங்கள்: என்னைப் பேசவிடுங்கள்: எனக்கு எது வந்தாலும் வரட்டும். |
14 | என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்? |
15 | அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்: இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன். |
16 | இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்: ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது. |
17 | என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்: என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும். |
18 | இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்: குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன். |
19 | இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது? அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன். |
20 | எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்: அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன். |
21 | உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்: உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும். |
22 | பின்னர் என்னைக் கூப்பிடும்: நான் விடையளிப்பேன்: அல்லது என்னைப் பேசவிடும்: பின் நீர் மறுமொழி அருளும். |
23 | என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை? என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும். |
24 | உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்? |
25 | காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ? காய்ந்த சுளத்தைக் கடிது விரட்டுவீரோ? |
26 | கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்: என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர். |
27 | என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்: கண் வைத்தீர் என் பாதை எல்லாம்: காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர். |
28 | மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்: அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர். |