1 | அதற்கு யோபு உரைத்த மறுமொழி: |
2 | உண்மையிலும் உண்மை: நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்! |
3 | உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு: உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்: இத்தகையவற்றை யார்தான் அறியார்? |
4 | கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன். |
5 | இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்: அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள். |
6 | கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்! |
7 | இருப்பினும், விலங்கிடம் வினவுக: உமக்கு அது கற்றுக்கொடுக்கும்: வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும். |
8 | அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக: அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும். |
9 | இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது? |
10 | அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன. |
11 | செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா? |
12 | முதியோரிடம் ஞானமுண்டு: ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு. |
13 | ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன! |
14 | இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது: அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது. |
15 | இதோ: அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்: வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும். |
16 | வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன: ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே! |
17 | அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்: நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார். |
18 | அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்: அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்: |
19 | குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்: நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்: |
20 | வாய்மையாளரின் வாயை அடைக்கினார்: முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்: |
21 | உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்: வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்: |
22 | புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார். காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார். |
23 | மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்: பின்பு அழிக்கின்றார்: மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்: பின், குறையச் செய்கின்றார். |
24 | மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார். |
25 | இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்: குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார். |