1 | இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார். |
2 | இந்த எஸ்ரா செராயாவின் மகன்: இவர் அசாரியாவின் மகன்: இவர் இல்கியாவின் மகன்: இவர் சல்லூமின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் அகித்தோப்பின் மகன்: |
3 | இவர் அமாரியாவின் மகன்: இவர் அசரியாவின் மகன்: இவர் மெரயோத்தின் மகன்: |
4 | இவர் செரகியாவின் மகன்: இவர் உசீயின் மகன்: இவர் புக்கீயின் மகன்: |
5 | இவர் அபிசுவாவன் மகன்: இவர் பினகாசின் மகன்: இவர் எலயாசரின் மகன்: இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன். |
6 | எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார். |
7 | அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர். |
8 | அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள். |
9 | ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார். |
10 | எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். |
11 | ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு: |
12 | “மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது: |
13 | என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிரும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன். |
14 | ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம். |
15 | மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும், |
16 | மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம். |
17 | இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும். |
18 | எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும். |
19 | உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும். |
20 | மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம். |
21 | மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது: விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும். |
22 | அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம். |
23 | நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும். |
24 | மேலும், நான் அறிவிப்பது: குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று. |
25 | எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்: திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும். |
26 | மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்: மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”. |
27 | எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான வாழ்த்தப்பெறுவாராக! |
28 | மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரங்கள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன். |