வேதாகமத்தை வாசி

எஸ்றா 6

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்பு மன்னர் தாரியு கட்டளையிடவே, பாபிலோனிலுள்ள கருவூலத்தைக் கொண்ட ஏட்டுச் சுருள்கள் வைக்கப்படும் அறையைச் சோதனையிட்டார்கள்.
2மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான அரண்மனையில் ஏட்டுச் சுருள் ஒன்று அகப்பட்டது. அது ஒரு பத்திரம். அதில் எழுதியிருந்ததாவது:
3'சைரசு மன்னர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டு, சைரசு மன்னர், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலைப் பற்றி ஆணையொன்று பிறப்பித்தார். எங்கே பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டனவோ அங்கேயே கோவில் கட்டப்படட்டும். அடித்தளம் உறுதியாக்கப்படட்டும். அதன் உயரம் அறுபது முழம், அதன் அகலம் அறுபது முழம் இருக்கட்டும்.
4மூன்று வரிசை பெரிய கற்களாலும், மூன்று வரிசை புது மரங்களாலும் அமையட்டும். அதற்குத் தேவையான செலவை அரசு கருவூலத்திலிருந்து கொடுக்கட்டும்.
5நெபுகத்னேசர் எருசலேம் கோவிலிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த கோவிலுக்குரிய பொன், வெள்ளிப் பாத்திரங்கள் எருசலேம் கோவிலுக்குத் திரும்பிக் கொடுக்கப்படட்டும். அவை கடவுளின் கோவிலில் முன்பு இருந்த இடத்திலேயே வைக்கப்படட்டும்.'
6எனவே, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருக்கும் தத்னாய்! செத்தர்போசனாய்! நீங்களும் பேராற்றின் அக்கரைப் பகுதியிலுள்ள உங்களைச் சார்ந்த அதிகாரிகளும், அவ்விடத்தைவிட்டு விலகுங்கள்!
7கடவுளின் கோவிலைக் கட்டும் பனியைத் தடைசெய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும்.
8யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்கவேண்டும்.
9மேலும் விண்ணகக் கடவுளுக்கு எரிபலி ஒப்புக் கொடுக்கத் தேவையான இளங்காளைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவையும் எருசலேமின் குருக்கள் தேவையொன்று கேட்கும் கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் நாள்தோறும் தவறாது கொடுக்கப்படட்டும்.
10இதனால் குருக்கள் விண்ணகக் கடவுளுக்கு நறுமணப் பலி செலுத்தி, மன்னரும் அவர் தம் மைந்தரும் நீடூழி வாழு வேண்டுமென மன்றாடுவார்களாக!
11எவராவது இக்கட்டளையை மாற்றினால், அவருடைய வீட்டிலுள்ள உத்திரத்தைப் பிடுங்கி அவரை அதில் கழுவேற்றித் தொங்கிவிட வேண்டும். இதனால் அவருடைய வீடு குப்பை மேடாகக்கடவது. இது எனது ஆணை.
12எந்த மன்னராவது, மக்களாவது இவ்வாணையை மாற்றவோ எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை அழிக்கவோ முற்பட்டால், தமது பெயரை அங்கு விளங்கும்படி நிலைநாட்டிய கடவுள் அவர்களை அழிப்பாராக! தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.
13பின்பு, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும் மன்னர் தாரியு அனுப்பிய ஆணைப்படியே எல்லாவற்றையும் சரிவரச் செய்து முடித்தனர்.
14இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்: வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.
15மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.
16இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத் தனத்திலிருந்து திரும்பிவந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்:
17கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக்கிடாய்களையும், நானூறு செம்மறிக்குட்டிகளையும் ஒப்புக் கொடுத்தார்கள்: இஸ்ரயேல் குலக்கணக்கின்படி பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள்.
18மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி எருசலேமில் அவர்களின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர்.
19மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நான் கொண்டாடினர்.
20குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திகொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.
21அடிமைத்தனதத்திலிருந்து திரும்பிவந்திருந்த இஸ்ரயேல் மக்களும், மேலும், இஸ்ரயேல் கடவுளை வழிபட வேற்றினத் தீட்டிலிருந்து ஒதுங்கி இவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் பாஸ்கா உணவை உண்டனர்.
22புளிப்பற்ற அப்ப விழாவை ஏழு நாள்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களை மகிழ்வுபடுத்தினார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களுக்குத் துணைபுரியமாறு ஆண்டவர் அசீரிய மன்னரின் மனத்தை மாற்றியிருந்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.