1 | இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார். |
2 | பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர். |
3 | குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை: மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை. |
4 | அரசருக்கும் மக்கள் சபையார் எல்லாருக்கும் இத்திட்டம் சரியெனப்பட்டது. |
5 | எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்: ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை. |
6 | அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று,‘இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்: அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார். |
7 | தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்து உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்: நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். |
8 | உங்கள் மூதாதையரைப் போல் நீங்களும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவராயிருக்க வேண்டாம். மாறாக, ஆண்டவருக்குப் பணியுங்கள், அவர் என்றென்றும் புனிதமாக்கியுள்ள திருத்தலத்திற்கு வந்து, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கு ஊழியம் புரியுங்கள். அப்பொழுது அவரது கோபக்கனல் உங்களை விட்டு நீங்கும். |
9 | நீங்கள் ஆண்டவரிடம் திரும்பி வந்தால், உங்கள் சகோதரர்களும் புதல்வர்களும் தங்களைச் சிறைப்படுத்தியோரிடமிருந்து இரக்கம் பெற்று, இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஏனெனில் உங்கள் கடவுளாம் ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்: நீங்கள் அவர்பால் திரும்பினால் அவர் தம் முகத்தை உங்களிடமிருந்து திருப்பிக்கொள்ளார் ‘ என்றனர். |
10 | அஞ்சலர், எப்ராயிம், மனாசே நாடுகளிலும் செபுலோனிலும்கூட நகர் நகராகச் சென்றனர். ஆனால் அவற்றின் மக்கள் இவர்களை எள்ளி நகையாடினர். |
11 | ஆயினும், ஆசேர், மனாசே செபுலோன் ஆகியவற்றிலிருந்து சிலர் தம்மையே தாழ்த்திக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். |
12 | ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்பவும், அரசர், தலைவர்களின் கட்டளைப்படியும் யூதாவினர் நடப்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் அவர்களை ஒருமனப்படுத்தியது. |
13 | இரண்டாம் மாதத்தில் புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாட எருசலேமில் மக்கள் சபையார் மாபெரும் அளவில் கூடினர். |
14 | அவர்கள் எருசலேமில் இருந்த பலிபீடங்கள், தூபபீடங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, கிதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தனர். |
15 | இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினர்: குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தவராய், தங்களையே தூய்மையாக்கிக் கொண்டனர். பின்னர், ஆண்டவரின் இல்லத்திற்கு எரிபலியைக் கொண்டு வந்தனர். |
16 | கடவுளின் மனிதராம் மோசேயின் திருச்சட்டப்படி, அவர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றனர். லேவியர் கையினின்று பெற்ற இரத்தத்தை குருக்கள் தெளித்தனர். |
17 | சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர். |
18 | இருப்பினும், மக்கள் பலர்-எப்ராயிம், மனாசே, இசக்கார், செபுலோன் குலத்தார் பலர்-தங்களையே தூய்மையாக்கிக் கொள்ளாமல், எழுதியுள்ளதற்கு மாறாக, பாஸ்காவை உண்டனர். எனவே எசேக்கியா வேண்டியது:‘நல்லவரான ஆண்டவரே! மன்னத்திருளும். |
19 | தன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைத் தேட மனம் கொண்ட ஒவ்வொருவனையும்-அவன் திருத்தலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்ளவில்லையெனினும்-மன்னித்தருளும். ‘ |
20 | ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டு, மக்களுக்கு நலமளித்தார். |
21 | எருசலேமில் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏழு நாள்கள் கொண்டாடினர். ஆண்டவரை லேவியர் நாள்தோறும் புகழ்ந்தனர்: குருக்கள் பேரொலி இசைக்கருவிகளை மீட்டிப் போற்றினர். |
22 | ஆண்டவரின் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லேவியர் அனைவரின் உள்ளத்தையும் தொடுமாறு எசேக்கியா பேசினார். விழா உணவை அவர்கள் ஏழு நாள்கள் உண்டு, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி, அவர்களின் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் புகழ்ந்து போற்றினர். |
23 | மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்: அவ்வாறே அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர். |
24 | யூதாவின் அரசர் எசேக்கியா மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், எழுபதாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தார், அவ்வாறே தலைவர்களும் மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தனர். குருக்கள் பலர் தங்களையே தூய்மையாக்கிக்கொண்டனர். |
25 | யூதாவின் அனைத்துச் சபையார். குருக்கள், லேவியர், இஸ்ரயேலின் அனைத்து மக்கள் சபையார் இஸ்ரயேலிலிருந்து வந்தவரும் யூதாவில் வாழ்ந்தவருமான அன்னியர் அனைவரும் அக்களிப்புற்றனர். |
26 | எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை. |
27 | குருக்களும் லேவியரும் எழுந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது. கடவுளின் திருஉறைவிடமான வானத்தை அவர்களது வேண்டுதல் எட்டியது. |