1 | இவை யாவும் முடிந்தபின், அங்கிருந்த இஸ்ரயேலர் எல்லாரும் யூதா நகர்களுக்குச் சென்றனர்: அங்கிருந்த சிலைத்தூண்களைத் தகர்த்து, அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினர். யூதா, பென்யமின், எப்ராயிம், மனாசே நாடுகளில் இருந்த தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் முற்றிலுமாக உடைத்தெறிந்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் நகர்களில் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பினர். |
2 | அடுத்து, எசேக்கியா குருக்களையும் லேவியரையும் அவரவர் பிரிவின்படியும், பலியின்படியும் பிரித்து, எரிபலி, நல்லுறவுப்பலி செலுத்தவும், ஆண்டவரது கூடார வாயிலில் பணி புரியவும் அவருக்கு நன்றிகூறிப் புகழவும் அந்த குருக்கள், லேவியர் குழுக்களை நியமித்தார். |
3 | ஆண்டவரின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளதற்கேற்ப, காலையும் மாலையும், ஓய்வு நாள், அமாவாசையிலும் மற்றும் குறிப்பிட்ட சில திருநாள்களிலும் செலுத்த வேண்டிய எரிபலிக்கு அரசர் தமது உடைமையின் ஒரு பகுதியை அளித்திருந்தார். |
4 | ஆண்டவரின் திருச்சட்டத்தில் குருக்களும் லேவியரும் முழு ஈடுபாடு கொள்ளும்படி அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கை அளிக்குமாறு எருசலேமில் இருந்த மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். |
5 | இக்கட்டளை பரவியபோது, இஸ்ரயேலின் புதல்வர் தானியத்தின் முதற்பலன், புதிய திராட்சை இரசம், எண்ணெய், தேன் முதலியவற்றை மிகுதியாகவே கொண்டு வந்தனர்: அத்துடன் நிலத்தின் எல்லா விளைச்சலிலும் பத்திலொரு பங்கைத் தாராளமாகக் கொடுத்தனர். |
6 | மேலும், யூதாவின் நகர்களில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரும் யூதாவினரும் தங்கள் ஆடுமாடுகளிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பொருள்களிலும் பத்திலொரு பங்கைக் கொண்டுவந்து குவியல் குவியலாகச் சேர்த்தனர். |
7 | மூன்றாம் மாதத்தில் அவாகள் இப்படிச் சேர்க்கத் தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்துக் கொண்டனர். |
8 | எசேக்கியாவும் தலைவர்களும் நுழைந்து அக்குவியல்களைக் கண்டு ஆண்டவரைப் போற்றி அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்கினர். |
9 | அந்தக் குவியல்களைக்குறித்து எசேக்கியா குருக்களையும் லேவியரையும் வினவியபோது, |
10 | சாதோக்கு வழிவந்த தலைமைக் குரு அசரியா அவரை நோக்கி,‘ஆண்டவரின் இல்லத்திற்குப் படையல்களை, மக்கள் கொண்டுவரத் தொடங்கியது முதல் நாங்கள் நிறைவாக உண்டு வந்துள்ளோம். ஆயினும் எஞ்சியது மிகுதியாகவே உள்ளது. ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்கியுள்ளார், எஞ்சியுள்ளவை இக்குவியல்கள் ‘ என்று கூறினார். |
11 | அப்பொழுது எசேக்கியா ஆண்டவரின் இல்லத்தில் பண்டகசாலைகளை எழுப்புமாறு கட்டளையிட, அவ்வாறே எழுப்பப்பட்டன. |
12 | முதற்பலன்களையும், பத்திலொரு பாகத்தையும், நேர்ச்சைப் பொருள்களையும் கவனத்துடன் அந்த அறைகளில் வைத்தனர். இவற்றையெல்லாம் கண்காணிக்கக் கொனானியா என்ற லேவியர் தலைவராகவும், அவர் சகோதரர் சிமயி துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். |
13 | இவ்விருவருக்கும்கீழ் எகியேல், அசரியா, நாகாத்து, அசாவேல், எரிமோத்து, யோசபாத்து, எலியேல், இஸ்மகியா, மகாத்து, பெனாயா ஆகியோர் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். அரசர் எசேக்கியாவும், ஆண்டவரின் இல்லத் தலைவர் அசரியாவும் கட்டளையிட்டவாறு இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். |
14 | லேவியர் இம்னாவின் மகனும் கீழை வாயிற்காப்பவனுமான கோரே, ஆண்டவருக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகளையும் படையல்களையும் பங்கிட அதிகாரம் பெற்று, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவற்றிற்குப் பொறுப்பேற்றிருந்தான். |
15 | குருக்களின் நகர்களில் தங்கள் சகோதரர்களுக்கு, பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடின்றியும், பிரிவுகளின் முறைப்படியும், பொருள்களைப் பகிர்ந்து கொடுப்பதில் ஏதேன், மின்யமின், ஏசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் மிகவும் நேர்மையான முறையில் அவருக்கு உதவி செய்தனர். |
16 | அவர்களின் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆண்பிள்ளைகளைத் தவிர, அவரவர் தம் பிரிவின்படி, தங்கள் பணியின் காரணமான அன்றைய கடமையை நிறைவேற்ற ஆண்டவரின் இல்லத்திற்கு வருகிற ஒவ்வொருவனுக்கும் பங்குகள் கொடுக்கப்பட்டன. |
17 | குருக்கள், அவர்களின் மூதாதையரின் குடும்பத்தின்படி பதிவு செய்யப்பட்டனர். இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினருமான லேவியர் அவர்களது பணியின்படியும் பிரிவின்படியும் பதிவு செய்யப்பட்டனர். |
18 | குருக்கள் தங்கள் எல்லாக் குழந்தைகள், மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய அனைவருடனும் பதிவு செய்யப்பட்டனர். ஏனெனில், அவர்கள் தங்களையே தூய்மையாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தனர். |
19 | தங்கள் நகர்களை அடுத்த வெளிநிலங்களிலோ வேறு நகர்களிலோ வாழ்ந்த ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்கு சேர வேண்டிய பங்குகளை அளிக்க ஆள்கள் நியமிக்கப்பட்டனர்: குருக்கள் குடும்பங்களில் எல்லா ஆண்களுக்கும், லேவியர்களின் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்த அனைவருக்கும் அவர்கள் பங்குகளை அளித்தனர். |
20 | எசேக்கியா யூதாவெங்கும் இவ்வாறு செய்தார். அவர் தம் கடவுளாம் ஆண்டவர் திருமுன், நல்லவராகவும் நேர்மையுடையவராகவும் உண்மையுடையவராகவும் ஒழுகினார். |
21 | அவர் கடவுள் இல்லத்திற்கான ஒவ்வொரு திருப்பணியையும் திருச்சட்டத்திற்கும் கட்டளைக்கும் ஏற்றவாறு செய்து ஆர்வமுடன் உழைத்து, தம் கடவுளை முழு இதயத்தோடு நாடினதால், அவர் அனைத்திலும் வெற்றி கண்டார். |