1 | அப்பொழுது தாவீது,;கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும் ; என்றார். |
2 | தாவீது இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்துவந்த அன்னியரைக் கூடிவரச் செய்தார். கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட கற்களைத் தயார் செய்வதற்கென்று கல் தச்சரை அவர் நியமித்தார். |
3 | தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார். |
4 | அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள். |
5 | தாவீது,;என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட்ட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்த வைப்பேன் ; என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார். |
6 | மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார். |
7 | தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி,;என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன். |
8 | மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, 'நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்: எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம். |
9 | இதோ! உனக்கு ஒரு மகன் பிறப்பான்! அவன் அமைதியின் மன்னனாய் இருப்பான்! சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனுக்கு அமைதியை அருள்வேன்! எனவே அவனுடைய பெயர்;சாலமோன் ; எனப்படும்! அவனுடைய வாழ் நாள்களில் இஸ்ரயேலுக்கு நிறைவாழ்வும் அமைதியும் அருள்வேன். |
10 | அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்: அவன் எனக்கு மகனாய் இருப்பான்: நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்: இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்' என்றார். |
11 | இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக! |
12 | உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக! |
13 | ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! |
14 | இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் ;டன் ;பொன்னும், நாற்பதாயிரம் ;டன் ; வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்: மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்: நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய். |
15 | வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர். |
16 | எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! ; என்றார். |
17 | மேலும் தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது: |
18 | ;உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருந்து, எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார் அல்லவா? உலகில் வாழ்வோரை என் கையில் ஒப்படைத்துள்ளார். ஆண்டவருக்கு முன்பாகவும், அவர் தம் மக்களுக்கு முன்பாகவும், உலக நாடுகள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. |
19 | இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும். ; |