1 | தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார். |
2 | அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார். |
3 | லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள். |
4 | அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும், |
5 | நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பெரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார். |
6 | தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்: |
7 | கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்: |
8 | இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்: |
9 | சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள். |
10 | சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர். |
11 | இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர். |
12 | கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர். |
13 | அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர். |
14 | கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர். |
15 | மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர், |
16 | கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார். |
17 | எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர். |
18 | இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார். |
19 | எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம். |
20 | உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா. |
21 | மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ். |
22 | எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர். |
23 | மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர். |
24 | தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள். |
25 | ஏனெனில்,;இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார். |
26 | அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை ; என்று தாவீது கூறினார். |
27 | தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்குமேற்பட்ட வயதினர் பதிவு செய்யப்பட்டனர். |
28 | அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்: |
29 | திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும். |
30 | ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்: |
31 | அத்தோடு, ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும்மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும். |
32 | ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும். |