1 | கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார்.ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்: வெள்ளம் தணியத் தொடங்கியது. |
2 | பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன: வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது. |
3 | மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது. |
4 | ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது. |
5 | பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது.பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன. |
6 | நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து, |
7 | காகம் ஒன்றை வெளியே அனுப்பினார்.அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது. |
8 | பின்னர். நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார். |
9 | ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார். |
10 | அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார். |
11 | மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது.அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார். |
12 | இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார்.அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை. |
13 | அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது.அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார்.இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது. |
14 | இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது. |
15 | அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது: |
16 | “நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள். |
17 | உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா.மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும்.பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்.” |
18 | ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர். |
19 | விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன. |
20 | அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார். |
21 | ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன்.ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது.இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். |
22 | மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.” |