1 | அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல்.ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன். |
2 | தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும். |
3 | வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள். |
4 | ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன்.நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.” |
5 | ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார். |
6 | மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு. |
7 | வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார். |
8 | தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும் |
9 | சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன. |
10 | ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
11 | நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன.வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன. |
12 | நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது. |
13 | நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார். |
14 | அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும், |
15 | உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன. |
16 | கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன.அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார். |
17 | நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது.வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது. |
18 | மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது. |
19 | மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின. |
20 | மூழ்கிய மலைகளுக்குமேல்நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது. |
21 | நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் - ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன. |
22 | தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின. |
23 | மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர். |
24 | நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று. |