1 | மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது, |
2 | மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர். |
3 | அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை.அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார். |
4 | தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர். |
5 | மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். |
6 | மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.அவரது உள்ளம் துயரமடைந்தது. |
7 | அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன்.மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன்.ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார். |
8 | ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது. |
9 | நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார்.நோவா கடவுளோடு நடந்தார். |
10 | நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர். |
11 | அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. |
12 | கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார்.இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது.மண்ணுலகில் ஒவ்வொரு வரும் தீய வழியில் நடந்துவந்தனர். |
13 | அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன். |
14 | உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்: அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. |
15 | பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்: அகலம் ஐம்பது முழம்: உயரம் முப்பது முழம். |
16 | பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி: பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை.பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை. |
17 | நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம். |
18 | உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்.உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல். |
19 | உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா.அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும். |
20 | வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும். |
21 | உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள்.அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.” |
22 | கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார். |