வேதாகமத்தை வாசி

ஆதியாகமம் 9

                   
புத்தகங்களைக் காட்டு
1கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.
2மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
3நடமாடி உயிர்வாழும்அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும்.உங்களுக்குப் பசமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
4இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள்.
5உங்கள் உயிராகியஇரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன்.உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன்.மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோஅவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்.ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.
7நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.”
8கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
9“இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
10பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
11உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது.மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”
12அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
13என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
14மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
15எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
16வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்”என்றார்.
17கடவுள் நோவாவிடம், “எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே”என்றார்.
18சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர்.காம் கானானின் தந்தை.
19இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர்.இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
20நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.
21அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
22கானானின் தந்தையாகிய காம் தன் தந்தைதிறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
23அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர்.அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
24நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
25அப்பொழுது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்:தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
26சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
27கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும்.அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும்.அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்” என்றார்.
28வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.