1 | தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான். |
2 | கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான். |
3 | எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். |
4 | எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், |
5 | இப்கார், எலிசூவா, எல்பெலேத், |
6 | நோகா, நெப்பேக், யப்பியா, |
7 | எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள். |
8 | தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான். |
9 | பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். |
10 | பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். |
11 | அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள். |
12 | அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன. |
13 | பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். |
14 | அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, |
15 | முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். |
16 | தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள். |
17 | அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார். |