சிலுவையின் வேதனையும் பாவத்தின் பிரிவினையும்
படிப்புகள்: 29
Print
ஆசிரியர்: கே. வித்யாசாகர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டிய சமயம் நெருங்கியபோது, "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" (லூக்கா 22:42) என்று பிதாவை நோக்கி ஜெபித்ததை நாம் பார்க்கிறோம். அடுத்த வசனங்களில், "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்; அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" (லூக்கா 22:44) என்று பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால், நமது உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும் வியர்வைச் சுரப்பிகளுக்கு (இரத்த நாளங்கள்) இரத்தத்தை விநியோகிக்கின்றன. ஒரு மனிதன் தாங்க முடியாத அளவு கடுமையான மனவேதனைக்கு உள்ளாகும் போது, அந்த நாளங்கள் வெடித்து, வியர்வைச் சுரப்பிகள் வழியாக வியர்வையுடன் இரத்தமும் கலந்து வெளியேறும். இதையே மருத்துவ மொழியில் "Hematidrosis" (ஹெமாட்டிட்ரோஸிஸ்) என்று அழைக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் விஷயத்திலும் அதுவே நடந்து, "அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாக" மாறியது.

அவர் அனுபவிக்கப்போகும் சிலுவைப் பாடுகளை (சரீர வேதனையை) நினைத்தே அவர் அவ்வளவு வியாகுலப்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில், அவர் தம்முடைய மரணத்தைக்குறித்து பலமுறை தீர்க்கதரிசனமாக முன்னறிவித்ததோடு, அந்தப் பாடுகளைச் சகிக்கவே தாம் உலகத்திற்கு வந்ததாகத் தெரியப்படுத்தியுள்ளார் (எபிரெயர் 10:7, மாற்கு 10:45). சிலுவை மரணத்தைத் தடுத்த பேதுருவைப்பார்த்து, "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே" என்று கடிந்துகொண்டார் (மத்தேயு 16:23). முக்கியமாக, "இதோ, நீங்கள் சிதறடிக்கப்பட்டு, அவனவன் தன் தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடும் காலம் வரும்; அது வந்தும் இருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்" (யோவான் 16:32) என்று கூறி, தாம் சகிக்கவேண்டிய சரீரப் பாடுகள் மற்றும் அவமானங்களின் மத்தியில் பிதாவை நினைத்துத் திடன்கொண்டார். அவ்வாறே, தமக்குச் சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்தவராய்த் தம்மைப் பிடிக்க வந்த போர்ச்சேவகர்களிடம் தாமே முன்வந்து தம்மை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 18:4-8).

அப்படியிருக்க, "அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழும்" அளவிற்கு அவர் வியாகுலப்பட்டது சிலுவையில் படப்போகும் சரீர வேதனைகளை நினைத்து என்று எண்ணுவது எவ்வகையிலும் சரியல்ல. பின் ஏன் அவர் அவ்வளவாக வியாகுலப்பட்டார்? பிதாவின் சித்தத்தின்படி, மனிதர்களின் பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரிக்கும்போது, சரீரப் பாடுகளை அனுபவிப்பது மட்டுமன்றி, பிதாவைப் பிரியும் கைவிடப்பட்ட நிலையையும் அவர் அனுபவிக்க வேண்டும். காரணம், நம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர்மேல் சுமத்தப்பட்டு (ஏசாயா 53:6), பாவம் அறியாத அவர் நமக்காகப் பாவமாக்கப்பட்டார் (2 கொரிந்தியர் 5:21). எனவே, அந்த நேரத்தில் பரிசுத்தமுள்ள பிதாவை விட்டுப் பிரிக்கப்படும் நிலைக்கு அவர் ஆளானார். மேலும், நமது பாவங்களுக்குச் சரீர மரணம் (ரோமர் 1:32) மட்டுமன்றி, பரிசுத்தமுள்ள தேவனை விட்டு நித்தியமாகப் பிரிக்கப்படும் தண்டனையும் (நரகம்) நம் மீது விதிக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:3, 2 தெசலோனிக்கேயர் 1:10). ஆகவே, நமக்காக அவர் அந்தப் பிரிவின் வேதனையையும் சுமக்க வேண்டும். நித்தியரான அவர் சிறிது நேரம் அந்தப் பிரிவை அனுபவித்தாலும், அது நாம் நித்தியமாக அனுபவிக்க வேண்டிய நரகத் தண்டனைக்குப் பரிகாரமாக அமைந்தது. சிலுவையில் இதுவே நடந்தது. அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல்தான் அவர், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27:46) என்று கதறி மரித்தார்.

இதிலிருந்து, கெத்செமனே தோட்டத்தில் அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாக மாறும் அளவிற்கு அவர் வியாகுலப்பட்டார், பிதாவை விட்டுத் தமக்கு ஏற்படப்போகும் அந்தப் பிரிவை நினைத்தே என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அந்தப் பிரிவைச் சகிக்க முடியாமல்தான் அவர் முன்னதாக, "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்" (லூக்கா 22:42) என்று ஜெபித்தார். ஆனால் அது பிதாவின் சித்தமல்ல என்பதை உணர்ந்து, "உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

இயேசு கிறிஸ்து பிதாவை விட்டுப் பிரிக்கப்பட்டதால் அடைந்த வேதனைக்கு மற்றொரு சான்று என்னவென்றால்: மனிதனின் இருதயத்தைச் சுற்றி தண்ணீருடன் கூடிய "Pericardium" (பெரிகார்டியம்) என்ற உறை இருக்கும். சாதாரண மனிதனுக்கு அதில் 20 CC வரை நீர் இருக்கும். ஆனால் ஒரு மனிதன் கடுமையான மனவேதனைக்கு உள்ளாகும்போது அது 500 CC வரை அதிகரிக்கும். சிலுவையில் இயேசு கிறிஸ்து "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27:46) என்று கதறி மரித்தபின், போர்ச்சேவகரில் ஒருவன் அவருடைய விலாவில் ஈட்டியினால் குத்தினபோது, இரத்தமும்தண்ணீரும் புறப்பட்டதற்குக் (யோவான் 19:34) காரணம் இதுவே. ரோமப் போர்ச்சேவகர்கள் சிலுவையில் அறையப்பட்ட ஒரு நபர் இறந்துவிட்டாரா என்பதை உறுதிசெய்ய (அல்லது உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தால் கொல்வதற்காக) நீளமான ஒரு ஈட்டியால் விலாவிலிருந்து இருதயப் பகுதி வரை குத்துவார்கள். அப்படி குத்தியபோதுதான், பிதாவைப் பிரிந்த வேதனையால் இருதயத்தைச் சுற்றி 500 CC வரை அதிகரித்திருந்த "Pericardium" உறையிலிருந்த தண்ணீர் வெளியேறியது.

கவனியுங்கள்; குமாரனாகிய கிறிஸ்துவுக்குப் பிதாவை விட்டுப் பிரிவு என்பது, சரீரத்தில் உள்ள "Capillary blood vessels" வெடித்து (Hematidrosis) வியர்வையுடன் இரத்தமும் வெளியேறும் அளவிற்கும், விலாவில் குத்தப்பட்டபோது "Pericardium" உறையிலிருந்து தண்ணீர் வெளியேறும் அளவிற்கும் வேதனையை ஏற்படுத்தியது என்றால், தேவனுடைய பிள்ளைகளாக மறுபடியும் பிறந்து, கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட (கலாத்தியர் 3:27) அனைவரிடத்திலும் பிதாவை விட்டுப் பிரிவது குறித்த அத்தகைய தாங்க முடியாத வேதனையின் உணர்வு இருக்க வேண்டும் அல்லவா?

"அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்." (1யோவான் 2:6).

அப்படியானால், அந்தத் தன்மை நம்மிடம் உள்ளதா? 'ஆம்' என்று சொல்வீர்களானால், நாம் பாவத்தின் பக்கம் சாயும் ஒவ்வொரு முறையும் பிதாவை விட்டுப் பிரிக்கப்படுகிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நம்முடைய பாவங்கள் சுமத்தப்பட்டதற்கே பாவம் அறியாத கிறிஸ்து அந்தப் பிரிவை அனுபவித்தார் என்றால், நமது சொந்தப் பாவங்களால் நாம் அவருடன் இன்னும் அதிகமாகப் பிரிக்கப்படுவோம் அல்லவா! அதனால்தான் சங்கீதகாரனாகிய தாவீது தான் பாவம் செய்தபோது, "உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்" (சங்கீதம் 51:11) என்று கதறினான். எனவே, பிதாவை விட்டுப் பிரிக்கும் பாவத்தை அருவருத்து, பிதாவையும் கிறிஸ்துவையும் பிரித்து அவரை அவ்வளவு வேதனைப்படுத்திய பாவத்தை முழுமையாக வெறுத்து, மீண்டும் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பவர்களே கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட உண்மையான தேவனுடைய பிள்ளைகள்.

ஆனால் ஒன்று; நாம் இந்தப் பூமியில் இருக்கும் வரை பாவ சுபாவத்துடனேயே, அதாவது பாவத்தில் விழும் சரீரத்துடனேயே & சுபாவத்துடனேயே இருக்கிறோம் (ரோமர் 7:23). இதனால் சில நேரங்களில் நாம் தவறிவிடுகிறோம். அதனால்தான் கிறிஸ்துவின் அன்பான சீஷனாகிய யோவான், "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" (1யோவான் 1:8) என்றும், "நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது" (1யோவான் 1:10) என்றும் கூறுகிறார். ஆனால், பிதாவை விட்டு நம்மை பிரிக்ககூடிய அந்தப் பாவத்தில், 'பரவாயில்லை, அவர் மன்னித்துவிடுவார்' என்று சாதாரணமாகப் பழகி அதில் சிக்கிக்கொள்கிறோமா, அல்லது உண்மையாகவே அதோடு போராடி சில நேரங்களில் தோற்றுப்போகிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உண்மையாகப் போராடித் தோற்றுப்போனால், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எவ்வித அநியாயமும் நீங்க நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான் 1:9) என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, உண்மையான மனந்திரும்புதலின் வியாகுலத்தோடு அறிக்கையிட்டு, வெற்றி பெற உதவியை தேவனிடத்தில் கோரினால், பிதாவை விட்டுப் பிரிக்கப்பட்ட நிலையிலிருந்து நாம் விடுதலையாக்கப்படுவோம்.

பாவத்துடன் உண்மையாகப் போராடுவது என்பதற்கும் ஒரு தெளிவைக் கொடுக்க விரும்புகிறேன். "பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே" (எபிரெயர் 12:4) என்று வாசிக்கிறோம். அதாவது, ஒரு போர்வீரன் தன் சரீரத்தில் காயம்பட்டு இரத்தம் சிந்தினாலும் எதிரியோடு எப்படிப் போராடுவானோ, அப்படியே நாமும் பாவத்தோடு இரத்தம் சிந்தும் அளவிற்குப் போராட வேண்டும். அப்படிப் போராடியும் ஏதேனும் பாவத்தில் தோற்றுப்போனால், மேலே கூறியதுபோல "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்..." என்ற ஆறுதல் நமக்கு உண்டு. மீண்டும் சொல்கிறேன்; பாவத்தைப் பழக்கமாகக் கொண்டு, 'பரவாயில்லை, தேவன் மன்னித்துவிடுவார்' என்று அதில் சிக்கிக்கொள்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்தாது. அவர்களுக்குப் பிதாவை விட்டுப் பிரிவதைக் குறித்த எந்த வேதனையும் இல்லை. பாவ அறிக்கை செய்வதில் உண்மையான மனந்திரும்புதலின் வியாகுலமும் இல்லை. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் அல்ல.

உண்மையான தேவனுடைய பிள்ளைகள், தேவனை விட்டுப் பிரிக்கப்படுகிறோம் என்றால் கிறிஸ்துவைப்போல வியாகுலப்படுவார்கள். அந்தப் பிரிவை ஏற்படுத்தும் பாவத்தோடு இரத்தம் சிந்தும் அளவிற்குப் போராடுவார்கள். தோற்றுப்போனால், "மனந்திரும்புதலின் வியாகுலத்தோடு" சங்கீதக்காரனைப்போலத் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு (சங்கீதம் 51), பேதுருவைப்போல மனம் கசந்து அழுது (மத்தேயு 26:75), அதன்பின் இன்னும் கவனமாக நடப்பார்கள் (1யோவான் 2:6, 1கொரிந்தியர் 10:12). முக்கியமாக, கிறிஸ்து பிதாவை விட்டுப் பிரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்து, அவரை அவ்வளவு வேதனைப்படுத்திய பாவத்தை முழுமையாக வெறுப்பார்கள் (சங்கீதம் 139:21,22).

"கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்" என்பதையும், "கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன்" என்பதையும் உறுதியான ஆதாரமாகக் கொண்டிருக்கிறது (2தீமோத்தேயு 2:19).

தேவனை விட்டுப் பிரிக்கும் ஒரு பாவத்தைக் குறித்து விழிப்புடன் இருக்க இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:

கிறிஸ்தவர்கள் சினிமா பார்க்கலாமா?
உண்மையான விசுவாசம் - போலியான விசுவாசம்