1 | அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். | 1சாமு 7:7 1சாமு 13:5 1சாமு 17:1 1சாமு 29:1 |
2 | தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். | 1சாமு 27:10 2சாமு 16:16-19 ரோம 12:9 |
3 | சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான். | 1சாமு 25:1 ஏசா 57:1 ஏசா 57:2 |
4 | பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். | யோசு 19:18 2இரா 4:8 |
5 | சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. | யோபு 15:21 யோபு 18:11 சங் 48:5 சங் 48:6 சங் 73:19 நீதி 10:24 ஏசா 7:2 ஏசா 21:3 ஏசா 21:4 ஏசா 57:20 ஏசா 57:21 தானி 5:6 |
6 | சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. | 1சாமு 14:37 1நாளா 10:14 நீதி 1:27 நீதி 1:28 புலம் 2:9 எசே 20:1-3 யோவா 9:31 யாக் 4:3 |
7 | அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். | 2இரா 1:2 2இரா 1:3 2இரா 6:33 ஏசா 8:19 ஏசா 8:20 புலம் 3:25 புலம் 3:26 ஆபகூ 2:3 |
8 | அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். | 1இரா 14:2 1இரா 14:3 1இரா 22:30 1இரா 22:34 யோபு 24:13-15 எரே 23:24 யோவா 3:19 |
9 | அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். | 2சாமு 18:13 2இரா 5:7 |
10 | அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். | 1சாமு 14:39 1சாமு 19:6 ஆதி 3:5 யாத் 20:7 உபா 18:10-12 2சாமு 14:11 மத் 26:72 மாற் 6:23 |
11 | அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். |
12 | அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். | 1சாமு 28:3 1இரா 14:5 |
13 | ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். | யாத் 4:16 யாத் 22:28 சங் 82:6 சங் 82:7 யோவா 10:34 யோவா 10:35 |
14 | அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். | 1சாமு 15:27 2இரா 2:8 2இரா 2:13 2இரா 2:14 |
15 | சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். | 1சாமு 28:8 1சாமு 28:11 |
16 | அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? | நியா 5:31 2இரா 6:27 சங் 68:1-3 வெளிப் 18:20 வெளிப் 18:24 வெளிப் 19:1-6 |
17 | கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். | நீதி 16:4 |
18 | நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். | 1சாமு 13:9 1சாமு 15:9 1சாமு 15:23-26 1இரா 20:42 1நாளா 10:13 எரே 48:10 |
19 | கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். | 1சாமு 12:25 1சாமு 31:1-6 1இரா 22:20 1இரா 22:28 |
20 | அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். | 1சாமு 28:5 1சாமு 25:37 யோபு 15:20-24 யோபு 26:2 சங் 50:21 சங் 50:22 |
21 | அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். | 1சாமு 19:5 நியா 12:3 யோபு 13:14 |
22 | இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். |
23 | அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான். | 1இரா 21:4 நீதி 25:20 |
24 | அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, | ஆதி 18:7 ஆதி 18:8 லூக் 15:23 |
25 | சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள். |