1 | நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கோடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார். |
2 | அவர் பெயர் எலிமலேக்கு: அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர். |
3 | அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேங்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார். |
4 | அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார். ஒருவர் பெயர் ஓர்பா: மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. |
5 | பிறகு மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார். |
6 | நாகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார். |
7 | பிறகு அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள். |
8 | ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கு எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக! |
9 | நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக! என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார். |
10 | அவர்களோ கதறி அழுது, “இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள். |
11 | அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா? |
12 | மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும் |
13 | அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார். |
14 | அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார். |
15 | ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார். |
16 | அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். |
17 | நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரித்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக! என்றார். |
18 | ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை. |
19 | பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேகம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள்” இவள் நகோமி தானே? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ, |
20 | என்னை நகோமி என அழைக்காதீர்கள்: மாரா என அழையுங்கள். |
21 | நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை”நகோமி என அழைப்பது ஏன்? என்றார். |
22 | இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தார். அவர்கள் பெத்லகேகம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது. |