வேதாகமத்தை வாசி

நியாயாதிபதிகள் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.ஆண்டவர் அவர்களைப் பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.
2சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார்.அவர் பெயர் மனோவாகு.அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.
3ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம்,”நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை.ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.
4இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே.
5ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது.ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென”நாசீர்” ஆக இருப்பான்.அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார்.
6அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது:”கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார்.அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது.அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை.அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.
7அவர் என்னிடம்,”இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே.தீட்டான எதையும் உண்ணாதே.ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்” என்றார்.”
8மனோவாகு ஆண்டவரை நோக்கி,”என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்” என்று கூறி வேண்டினார்.
9கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார்.கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார்.அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார்.அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.
10அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம்,”இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார்” என்று தெரிவித்தார்.
11மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார்.அவர் அம்மனிதரிடம் வந்து,”இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?” என்று கேட்டார்.அதற்கு அவர்,”நான் தான்” என்றார்.
12மனோவாகு”உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.
13ஆண்டவரின் தூதர் மனோவாகிடம்,”நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.
14திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது.திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது.தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது.நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்” என்றார்.
15மனோவாகு ஆண்டவரின் தூதரிடம்,”தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும்.உமக்காக ஓர் ஆட்டுக்குட்டியைச் சமைக்கின்றோம்” என்றார்.
16ஆண்டவரின் தூதர் மனோவாகிடம்,”நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன்.நீ ஒரு எரி பலியைச் செலுத்துவதாக இருந்தால், அதை ஆண்டவருக்குச் செலுத்து” என்றார்.ஏனெனில் மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை.
17மனோவாகு ஆண்டவரின் தூதரிடம்,”உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்” என்றார்.
18ஆண்டவரின் தூதர் அவரிடம்,”எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது” என்றார்.
19மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார்.அப்பொழுது, மனோவாகும் அவர் மனைவியும் காணும் வண்ணம் ஆண்டவர் வியப்பானதொன்றைச் செய்தார்.
20பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான்நோக்கி மேல் எழும்பியபோது, அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார்.மனோவாகும் அவர் மனைவியும் அதைப்பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர்.
21ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை.மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார்.
22மனோவாகு தம் மனைவியிடம்,”நாம் செத்தோம்.ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்து விட்டோம்” என்றார்.
23அவர் மனைவி அவரிடம்,”ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார்: இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார்: இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்” என்றார்.
24அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார்.பையன் வளர்ந்து பெரியவனானான்.ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார்.
25சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.