வேதாகமத்தை வாசி

நியாயாதிபதிகள் 12

                   
புத்தகங்களைக் காட்டு
1எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம்,”எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர்.உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர்.
2இப்தா அவர்களிடம்,”அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன்.நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.
3நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன்.ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார்.இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.
4இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார்.கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர்.ஏனெனில் அவர்கள்,”கிலயாதியரே! எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள்” என்று பழித்துரைத்திருந்தனர்.
5கிலயாதியர் எப்ராயிமுக்க உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன்,”நான் கடந்து செல்கிறேன்” என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம்,”நீ எப்ராயிமைச் சார்ந்தவனா?” என்று கேட்பர்.அவன்”இல்லை” எனச் சொன்னால்,
6அவர்கள் அவனிடம்,”ஷிபோலத்து” என்று சொல்” என்பர்.அவன்”சிபோலத்து” என்பான்.அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர்.இவ்வாறு அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.
7இப்தா ஆறு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.கிலயாதைச் சார்ந்த இப்தா இறந்து, கிலயாதின் நகர் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார்.
8அவருக்குப்பின் பெத்லகேமைச் சார்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
9அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர்.அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார்.வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார்.அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
10இப்சான் இறந்து பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்
11அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவர்களாக விளங்கினார்.
12செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார்.
13அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
14அவருக்கு நாற்பது பதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர்.அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர்.அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
15பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் செய்யப்பட்டார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.