வேதாகமத்தை வாசி

நியாயாதிபதிகள் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர்.அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார்.
2மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர்.எனவே மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர்.
3இஸ்ரயேல் மக்கள் பயிரிட்டதை மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்களும் அழித்து வந்தனர்.
4அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக முற்றுகையிட்டுக் காசா வரையில் உள்ள நிலப்பகுதியின் விளைச்சலை அழித்து வந்தனர்:இஸ்ரயேலில் உணவை விட்டுவைக்கவில்லை: ஆட்டையும் மாட்டையும் கழுதையையும் எதையுமே விட்டுவைக்கவில்லை.
5அவர்கள் தங்கள் கால்நடைகளுடனும் கூடாரங்களுடனும் வெட்டுக்கிளிகள்போல் பெருங்கூட்டமாக வந்தனர்.அவர்களும் அவர்களுக்குரிய ஒட்டகங்களும் எண்ணிக்கையில் அடங்கா.அவர்கள் கொள்ளையடிக்க நாட்டினுள் வந்தனர்.
6மிதியானியரிடம் மிகவும் சிறுமையுற்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.
7இவ்வாறு மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது,
8ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார்.அவர் அவர்களுக்குக் கூறியது:”இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தேன்.உங்களை அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தேன்.
9எகிப்தியரின் கையிலிருந்தும், உங்களை நசுக்கியோர் அனைவரின் கையிலிருந்தும், உங்களை நான் மீட்டேன்.அவர்களை உங்கள் முன்னிருந்து விரட்டிவிட்டு அவர்கள் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன்.
10நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். “நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அம்மோனியரின் தெய்வங்களை வணங்காதீர்கள்” என நான் உங்களுக்குக் கூறியிருந்தேன்.நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை.”
11பின்பு ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார்.அந்த மரம் அபியேசர் குடம்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது.அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார்.
12ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி,”வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்றார்.
13கிதியோன் அவரிடம்,”என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே!” என்றார்.
14ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி,”உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய்.மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய்.உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார்.
15கிதியோன் அவரிடம்,”என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடம்பம்.என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன்” என்றார்.
16ஆண்டவர் அவரிடம்,”நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்” என்றார்.
17கிதியோன்,”உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும்.
18நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார்.அவரும்,”நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.
19கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால்” மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார்.பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார்.
20கடவுளின் தூதர் அவரிடம்,”இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறைமீது வைத்துக் குழம்பை ஊற்று” என்றார்.அவரும் அவ்வாறே செய்தார்.
21ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார்.பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது.ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.
22அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார்.கிதியோன்,”ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார்.
23ஆண்டவர் அவரிடம்,”உனக்கு நலமே ஆகக! அஞ்சாதே! நீ சாகமாட்டாய்” என்றார்.
24கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார்.அதை”நலம் நல்கும் ஆண்டவர்” என அழைத்தார்.அது இந்நாள் வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஒபிராவில் உள்ளது.
25அவ்விரவில் ஆண்டவர் அவரிடம்,”உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள்.உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து ஏறி: அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து!
26உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு.இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து” என்றார்.
27கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.
28நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர்.இதோ! பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது.அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது.அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தது.
29ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம்,”இதைச் செய்தவர் யார்?” என்று வினவினர்.
30நகர மக்கள் யோவாசிடம்,”உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா.அவன் சாக வேண்டும்.ஏனெனில் அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான்.அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றனர்.
31யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும்,”நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா? அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா? பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான்.பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும்” என்றார்.
32“தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும்” என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு”எருபாகால்” என்று அந்நாளில் பெயரிட்டனர்.
33எல்லா மிதியானியரும், அமலேக்கியரும் கிழக்கில் வாழும் மக்களும் ஒன்றுகூடி, யோர்தானைக் கடந்து இஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
34ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது.அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடம்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார்.
35மனாசே குலம் முழுவதற்கும் அவர் தூதரை அனுப்பினார்.அவர்களும் அவர் பின்வர அழைக்கப்பட்டனர்.ஆசேர், செபுலோன், நப்தலி குலங்களுக்கும் தூதரை அனுப்பினர்.அவர்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
36கிதியோன் கடவுளிடம்,”நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால்,
37இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன்.கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார்.
38அவ்வாறே நடந்தது.மறுநாள் காலை அவர் எழுந்து கம்பளியைப் பிழிந்தார்.அவர் கம்பளியை முறக்கிப் பிழிய, பனி நீர் ஒரு கிண்ணம் முழுவதையும் நிரப்பியது.
39கிதியோன் கடவுளிடத்தில்,”எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர்.மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன்.இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன்.கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டுமு.தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்” என்றார்.
40அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார்.கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இறங்கி இருந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.