1 | அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்: |
2 | “இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர். |
3 | அரசர்களே, கேளுங்கள்! இளவரசர்களே, செவிகொடுங்கள்! நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன்.இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன். |
4 | ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது. |
5 | ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின.சீனாய் மலையே! நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய். |
6 | அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன.பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர். |
7 | தெபோரா! நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன. |
8 | வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது.இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது? |
9 | என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது.மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்! |
10 | பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே! விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே! பாதையில் பயணம் செய்வோரே! பாடி மகிழுங்கள்! |
11 | நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது.இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது.அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள். |
12 | எழுந்திடு! தெபோரா! எழுந்திடு! பாடல் ஒன்று பாடு! எழுந்திடு! பாராக்கு! அபினோவாம் புதல்வா! உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு! |
13 | அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர்.வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர். |
14 | எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர்.பென்யமின்! உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர். |
15 | இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர்.இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்: அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர்.ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே! |
16 | மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய்? ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே! |
17 | கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது.தாண்! நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய்? ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான். |
18 | செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர்.உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே! |
19 | மன்னர்கள் வந்து போரிட்டனர்.கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர்.கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை. |
20 | வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன!தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன! |
21 | கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது.பெருக்கெடுத்து வரும் ஆறெ கீசோன் ஆறு.என் உயிரே! வலிமையுடன் பீடு நடை போடு! |
22 | குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன.குதிரைகள் பாய்ந்து ஓடின: வேகமாக விரைந்து ஓடின. |
23 | மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர்.அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள்.ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. |
24 | கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறு பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்! |
25 | அவன் கேட்டதோ தண்ணீர்! இவள் கொடுத்ததோ பால்! அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள். |
26 | அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள்.அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது.சீசராவின் தலையில் அடித்தாள்: சிதைத்தாள்: அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்: துளைத்தான். |
27 | அவன் சரிந்தான்: விழுந்தான்: அவகாலடியில் உயிரற்றுக் கிடந்தான்: அவள் காலடியில் அவன் சரிந்தான்: விழுந்தான்: அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான். |
28 | சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள்.சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்:”அவன் தேர்வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை? |
29 | அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்: அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்: |
30 | அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்: சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்: என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்: இரண்டு பூப்பின்னல் ஆடைகள். |
31 | “ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும்! உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்!” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று. |