வேதாகமத்தை வாசி

யோசுவா 9

                   
புத்தகங்களைக் காட்டு
1யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர்.
2யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர்.
3கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர்.
4கிபயோன் குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள்.அவர்கள் தங்கள் கழுதைகளின் மீதுகிழிந்த மூட்டைகளையும், பழைய,
5கிழிந்து தைக்கப்பட்ட திராட்சை இரசத் தோல்பைகளையும் ஏற்றிக் கொண்டு, பழைய தைக்கப்பட்ட காலணிகளையும், பழைய ஆடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்து சாம்பல் பூத்துவிட்ட அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர்.
6அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள்.அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும்,”நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம்.இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்” என்றனர்.
7இஸ்ரயேல் மக்கள் இவ்வியரிடம்,”நீங்கள் எங்கள் நடுவில் வாழ்கின்றீர்கள்.நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளமாட்டோம்” என்றார்கள்.
8அவர்கள் யோசுவாவிடம்,”நாங்கள் உங்கள் பணியாளர்கள்” என்றனர்.யோசுவா அவர்களிடம்”நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டார்.
9அவர்கள் அவரிடம்,”மிகவும் தொலையில் உள்ள நாட்டிலிருந்து உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் உங்கள் பணியாளர்கள் வந்திருக்கின்றார்கள்.ஏனெனில் அவரது பெயரைப் பற்றியும், அவர் எகிப்து நாட்டில் செய்த அனைத்தைப்பற்றியும் கேள்விப்பட்டோம்.
10யோர்தானுக்கு அப்பால் வாழ்ந்த எஸ்போன் மன்னன் சீகோன், அஸ்தரோத்திலிருந்த பாசான் மன்னன் ஓகு ஆகிய இரண்டு எமோரிய மன்னர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியும் கேள்வியுற்றோம்.
11எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டில் வாழ்வோர் அனைவரும் எங்களிடம்,”உங்கள் கைகளில் வழி உணவை எடுத்துக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள்.அவர்களிடம் நாங்கள் உங்கள் பணியாளர்கள்.இப்போது எங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள்” என்றனர்.
12நாங்கள் உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வழி உணவாக எடுத்துக் கொண்ட இந்த அப்பம் சூடாக இருந்தது.இப்போதோ காய்ந்து சாம்பல் பூத்துவிட்டது.
13“இவை திராட்சை ரசத் தோல்பைகள்.நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன.இப்போதோ கிழிந்துவிட்டன.எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன” என்றனர்.
14இஸ்ரயேல் மக்கள் அவர்களது உணவை எடுத்துக் கொண்டனர்: ஆண்டவரது வார்த்தையை நாடவில்லை.
15யோசுவா கிபயோன் மக்களை நல்லிணக்கத்தோடு ஏற்று, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களை வாழவிட்டார்.சபைத்தலைவர்கள் அவர்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தனர்.
16அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர்.
17இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர்.கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள்.
18இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை.ஏனெனில் சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள்.சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது.
19எல்லாத் தலைவர்களும் சபையின் அனைவரிடமும்,”அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளித்துவிட்டோம்.இப்பொழுது நாங்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.
20நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம்.நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும்” என்றனர்.
21மேலும் தலைவர்கள் அவர்களிடம்,”அவர்கள் வாழட்டும்.ஆனால் சபை முழுவதற்கும் அவர்கள் மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் ஆகட்டும்” என்று கூறித் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டனர்.
22யோசுவா அவர்களை அழைத்து,”நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர்”நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள்” என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்?
23நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள்.உங்கள் அடிமைத்தனம் நீங்காது.மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்” என்றார்.
24அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக,”உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது.ஆகவே நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம்.
25இப்பொழுது இதோ! நாங்கள் உங்கள் கையில் உள்ளோம்.எது நல்லதும் நீதியும் ஆனதோ அதைச் செய்யுங்கள்” என்றனர்.
26அவர் அவர்களுக்குச் செய்தது: அவர் இஸ்ரயேல் மக்களின் கைகளினின்று அவர்களை விடுவித்தார்.இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை.
27யோசுவா, அந்நாளில் அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார்.அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.