வேதாகமத்தை வாசி

யோசுவா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள்.யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் சர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான்.இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.
2பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார்.அவர்களிடம்,”சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார்.அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள்.
3அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம்,”மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம்.இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும்.மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம்.ஏனெனில் அங்குள்ளவர்கள் சிலரே” என்றனர்.
4அவ்வாறே மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர்.ஆனாலும் அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள்.
5ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள்.எனவே மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.
6யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.
7யோசுவா,”ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும்.
8என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்?
9கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?” என்றார்.
10ஆண்டவர் யோசுவாவிடம்,”எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்?
11இஸ்ரயேலர் பாவம் செய்தனர்.நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர்.அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்: களவுசெய்தனர்: வஞ்சித்தனர்: அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
12ஆகவேதான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை: புறமுதுகிட்டு ஓடினர்.அவர்கள் அழிவுக்குரியவர்கள்.உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்.
13எழுந்திரு.மக்களைப் புனிதமாக்கு: நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறு.ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.
14காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும்.எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர்.
15அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும்.ஏனெனில் அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான்” என்றார்.
16யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார்.யூதா குலம் பிடிபட்டது.
17எனவே அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார்.செராகின் குடும்பம் பிடிபட்டது.ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார்.சபதி வீடு பிடிபட்டது.
18அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார்.செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான்.அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன்.
19யோசுவா ஆக்கானிடம்,”என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல்.என்னிடமிருந்து மறைக்காதே” என்றார்.
20ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக,”உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.நான் செய்தது இதுவே:
21அழிவுக்குரியவற்றுள்ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன்.அவற்றின்மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன்.எனது கூடாரத்திற்குள் வெள்ளி அடிப்பகுதியில் இருக்க அவற்றைத் தரையில் புதைத்து வைத்துள்ளேன்” என்றார்.
22யோசுவா தூதரை அனுப்பினார்.அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர்.இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன.
23அவர்கள் கூடாரத்திலிருந்து அவற்றைக் கைப்பற்றினர்.அவர்கள் அவற்றை யோசுவாவிடமும் எல்லா இஸ்ரயேல் மக்களிடமும் கொண்டுவந்து ஆண்டவர் திருமுன் பரப்பி வைத்தனர்.
24செராகின் மகன் ஆக்கான், வெள்ளி, மேலாடை, தங்கக்கட்டி, அவனுடைய புதல்வர், புதல்வியர், அவனுடைய மாடு, கழுதை, ஆடு, கூடாரம் ஆகிய அவனுக்கிருந்த அனைத்தையும் யோசுவா கைப்பற்றி அவர்களோடு எல்லா இஸ்ரயேல் மக்களையும் ஆக்கோர் பள்ளத்தாக்கிற்குக் கூட்டி வந்தார்.
25யோசுவா,”ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்” என்றார்.இஸ்ரயேல் மக்கள் அனைவரும்அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்.அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர்.
26அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர்.அது இந்நாள்வரை உள்ளது.ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார்.ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர்”ஆக்கோர் பள்ளத்தாக்கு” என அழைக்கப்படுகின்றது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.