1 | ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார். |
2 | யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:”நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன். |
3 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை முன்னிட்டு வேற்றினத்தாருக்குச் செய்த அனைத்தையும் கண்டீர்கள்.ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிட்டார். |
4 | பாருங்கள்! யோர்தானிலிருந்து மேற்கே பெருங்கடல்வரை நான் சிதறடித்த எல்லா நாடுகளையும் மீதியிருக்கின்ற நாடுகளையும் உங்கள் குலங்களுக்கு உரிமையாகக் கொடுத்துள்ளேன். |
5 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவர்களைத் துரத்தி வெளியேற்றுவார்.உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறியபடி, அவர்கள் நிலங்களை உங்கள் உடைமைகளாக்கிக் கொள்வீர்கள். |
6 | மோசேயின் திருச்சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கைக்கொள்வதில் கவனமாயிருங்கள்.அதனின்று வலப்புறமோ இடப்புறமோ விலகாதபடி உறுதிகொண்டிருங்கள். |
7 | உங்கள் நடுவில் எஞ்சியிருக்கும் இந்த வேற்றினத்தாருடன் சேராதிருங்கள்.அவர்களுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லாமலும், அவற்றின்மீது ஆணையிடாமலும், அவற்றுக்கு ஊழியம் செய்யாமலும், அவற்றை வணங்காமலும் இருப்பதில் உறுதியாக இருங்கள். |
8 | இந்நாள் வரை நீங்கள் செய்ததுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள். |
9 | ஆண்டவர் மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த வேற்றினங்களை உங்கள் முன்னிருந்து விரட்டினார்.இந்நாள்வரை எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. |
10 | உங்களுள் ஒரே மனிதன் ஆயிரம் பேரை வெல்வான்.ஏனெனில் தம் வாக்குறுதிக்கிணங்க உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். |
11 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்புகூர்வதில் மட்டும் கருத்தாயிருங்கள். |
12 | மாறாக, நீங்கள் வழிவிலகி இங்கு எஞ்சியுள்ள வேற்றினத்தாருடன் சேர்ந்துகொண்டு அவர்களுடன் கலப்புமணம் செய்து கொண்டால், |
13 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். |
14 | இதோ! மண்ணில் தோன்றிய யாவரும் செல்லும் வழியில் இப்பொழுது நானும் செல்லவிருக்கிறேன்.உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுகூடத் தவறவில்லை என்பதை உங்கள் முழு இதயத்துடனும் முழு உள்ளத்துடனும் அறிந்து கொள்ளுங்கள்.அவை அனைத்தும் உங்களுக்கு நிறைவேறின: ஒன்றுகூடத் தவறவில்லை. |
15 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளும், உங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன.அதுபோலவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்கு அளித்த இந்த நல்ல நிலத்திலிருந்து உங்களை அழிக்கும்வரை உங்கள்மீது ஆண்டவர் எல்லாத் தீமைகளையும் விழச்செய்வார். |
16 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கடடளையிட்ட உடன்படிக்கையை மீறி, நீங்கள் சென்று வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால் ஆண்டவரின் சினம் உங்களுக்கெதிராகப் பற்றி எரியும்.அவர் உங்களுக்கு அளித்த நல்ல நிலத்திலிருந்து விரைவில் அழிந்து போவீர்கள். |