வேதாகமத்தை வாசி

யோசுவா 11

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.
2மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும்
3கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான்.
4அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர்.
5அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள்.அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.
6ஆண்டவர் யோசுவாவிடம்,”அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில் நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன்.அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய்.அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய் என்றார்.
7யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர்.
8ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார்.அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர்.அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர்.
9ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார்.குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார்.அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.
10இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார்.அதன் மன்னனை வாளால் தாக்கினார்.ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது.
11இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை: ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்.
12யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார்.ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார்.
13மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை.யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார்.
14அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர்.மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை.
15தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார்.யோசுவா அதன்படியே செய்தார்.ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை.
16யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
17ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார்.
18யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.
19கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை.எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர்.
20இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார்.அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர்.
21இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார்.அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார்.
22இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை.காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்.
23ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார்.யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.