வேதாகமத்தை வாசி

1தீமோத்தேயு 4

                   
புத்தகங்களைக் காட்டு
1தூய ஆவியார் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் ஏமாற்றும் ஆவிகளுக்கும் பேய்களின் போதனைகளுக்கும் செவிசாய்த்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவர்.
2அலகைக்கு உரியவர் என்னும் குறியிடப்பட்ட மனச்சான்று உடைய பொய்யர்களின் வெளி வேடத்தால் கவரப்படுவர்.
3அந்தப் பொய்யர்கள் திருமணத்தைத் தடை செய்கிறார்கள்: சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்: ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்துள்ளார்.
4கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை.
5ஏனெனில் கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும்.
6இவற்றைச் சகோதரர் சகோதரிகளுக்கு எடுத்துக் கூறினால் நீ கிறிஸ்து இயேசுவின் நல்ல தொண்டனாய் இருப்பாய். நீ பின்பற்றி வருகிற விசவாசக்கோட்பாடுகளாலும் நற்போதனைகளாலும் வளர்ச்சி பெறுவாய்.
7உலகப் போக்கிலான புனைகதைகளையும் பாட்டிக் கதைகளையும் விட்டுவிலகு. இறைப்பற்றில் நீ வளரப் பயிற்சி செய்.
8ஏனென்றால் உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும். இது இம்மையிலும் மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம் என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
9இக்கூற்று உண்மையானது: எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
10வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர்.
11இவற்றைக் கட்டளையாகக் கொடுத்துக் கற்பித்து வா.
12நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு.
13நான் வரும்வரை விசுவாசிகளுக்கு மறைநூலைப் படித்துக் காட்டுவதிலும் அறிவுரை வழங்குவதிலும் கற்பிப்பதிலும் கவனம் செலுத்து.
14இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே.
15இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்து. இவைகளிலேயே ஈடுபட்டிரு. அப்பொழுது நீ அடைந்துள்ள வளர்ச்சி எல்லாருக்கும் தெளிவாகும்.
16உன்னைப்பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு: அவைகளில் நிலைத்திரு: இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்: உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.