வேதாகமத்தை வாசி

உபாகமம் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.
2உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள்.அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார்.அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.
3அவர் உங்களை எளியவராக்கினார்.உங்களுக்குப் பசியைத் தந்தார்.ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
4இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை: உங்கள் காலடிகள் வீங்கவும் இல்லை.
5ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக.
6உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்.
7ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது.
8கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு.அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு.
9அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள்.அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது.அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு.அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம்.
10நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள்.அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.
11இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.
12நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்,
13உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்.
14நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம்.
15அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர்.
16உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
17எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.
18உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.
19மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
20உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.