1 | உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே. |
2 | நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். |
3 | இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். |
4 | இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். |
5 | முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! |
6 | இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். |
7 | நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல்.உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. |
8 | கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள்.உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். |
9 | வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. |
10 | மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், |
11 | நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும், |
12 | அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு. |
13 | கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு! |
14 | உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம்.ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். |
15 | இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம். |
16 | மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம். |
17 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள். |
18 | ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள்.அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும்.உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள். |
19 | மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார். |
20 | வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி,”நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன?” என்று கேட்கும் போது, |
21 | நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்:”நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம்.ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார். |
22 | எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார். |
23 | நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்: அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார். |
24 | நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார். |
25 | நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.” |