1 | வானங்களே! நான் பேசுவேன்: செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள். |
2 | பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக! |
3 | நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்: நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன். |
4 | அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்! |
5 | அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்: அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்! |
6 | ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? |
7 | பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்: அவர் உனக்கு அறிவிப்பார்: பெரியோரிடம் கேள்: அவர்கள் உனக்குச்சொல்வர். |
8 | உன்னதமானவர் வௌவேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார். |
9 | ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! |
10 | பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்: வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்: அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்: கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார். |
11 | கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல், |
12 | ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்: வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை. |
13 | பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்: வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்: கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்: கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான். |
14 | பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார். |
15 | ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது: எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்: தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்: தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான். |
16 | வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்: அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர். |
17 | இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்: அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர். |
18 | உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்: உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்”. |
19 | தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். |
20 | அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்: அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்: ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்: நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். |
21 | இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்: அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்: ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். |
22 | எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்: கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்: பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்: மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும். |
23 | தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்: என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன். |
24 | பசியினால் அவர்கள் வாடுவர்: கொள்ளை நோயால் மாய்வர்: கொடிய வாதைகளால் மடிவர்: விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்: புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர். |
25 | வெளியிலே வாள்: உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர். |
26 | நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்: அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். |
27 | ஆயினும்,”எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!” என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். |
28 | அவர்கள் புத்தி கெட்ட மக்கள்: அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. |
29 | அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்! |
30 | ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? |
31 | அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர். |
32 | அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்: கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்: அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்: அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை. |
33 | அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது: விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது. |
34 | இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ? |
35 | பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன: உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்: அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது: அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. |
36 | அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்: அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். |
37 | அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே? |
38 | அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே! |
39 | நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே: உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே: குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார். |
40 | ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன். |
41 | மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன். |
42 | கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்: என் வாள் சதையை உண்ணச் செய்வேன். |
43 | வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்: அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்: அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார். |
44 | மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள். |
45 | இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது: |
46 | உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள். |
47 | இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல.அதுவே உங்களது வாழ்வு.யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். |
48 | அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது: |
49 | மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார்.உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே. |
50 | சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய். |
51 | ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய்.அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை. |
52 | எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய்.அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன்.நீயோ அதனுள் செல்ல மாட்டாய். |