1 | ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு: |
2 | மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். |
3 | கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள். |
4 | ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை. |
5 | நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில்கூட்டிவந்தேன்.அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை: உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை. |
6 | நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை.இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.” |
7 | நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர்.நாம் அவர்களை முறியடித்தோம். |
8 | அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம். |
9 | எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். |
10 | இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள்.உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும். |
11 | உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள். |
12 | ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும், |
13 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள். |
14 | வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்துகொள்ளவில்லை. |
15 | மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார். |
16 | எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். |
17 | அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள். |
18 | அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும்.நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும். |
19 | அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும்,”நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும்” என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும். |
20 | ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார்.மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும்.இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும்.ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார். |
21 | திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார். |
22 | அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது, |
23 | ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது, |
24 | வேற்றினத்தார் அனைவரும்”ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன?” என்று கேட்பர். |
25 | அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர். |
26 | அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். |
27 | ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார். |
28 | அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார்.இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும். |
29 | எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை.வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. |