1 | மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். |
2 | நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள். |
3 | உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள். |
4 | நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள். |
5 | அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள்.அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம். |
6 | கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள்.அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள். |
7 | நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள். |
8 | மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள். |
9 | பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது:”இஸ்ரயேலே, கவனமாகக் கேள்.நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய். |
10 | எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று”. |
11 | மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: |
12 | நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும். |
13 | மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும். |
14 | லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது: |
15 | ”ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்”.உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக”அப்படியே ஆகட்டும்” என்பர். |
16 | ”தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும்.உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்”என்பர். |
17 | ”தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
18 | ”பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்.உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
19 | ”அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
20 | ”தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
21 | ”எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும்” என்பர். |
22 | ”தன் தந்தையில் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்:”உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
23 | ”தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
24 | ”தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
25 | ”குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்” : உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |
26 | ”இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர். |