1 | ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். |
2 | அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள். |
3 | இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடுகிறான். |
4 | இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது.ஏனெனில் அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும்.உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே! |
5 | ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம்.அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது.அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான். |
6 | மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே.அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும். |
7 | இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும்.இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று. |
8 | தொழுநோயைக் குறித்து எச்சரிக்கையாய் இரு.லேவிய குருக்கள் உனக்குக் கற்பிப்பதுபோல் அனைத்தையும் செய்வதில் மிகக் கவனமாயிரு.நான் அவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு செய்வதில் கருத்தாயிரு. |
9 | எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில இருத்து. |
10 | உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்க அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே. |
11 | வெளியே நில்.உன்னிடம் கடன் வாங்கியவர், வெளியே உன்னிடம் அடகைக் கொண்டுவரட்டும். |
12 | அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே. |
13 | மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும்.அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார்.உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய். |
14 | வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. |
15 | அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு.கதிரவன் மறையுமுன்னே கொடு.ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது.இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார்.அப்போது அது உனக்குப் பாவமாகும். |
16 | பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம்.அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும். |
17 | அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே.கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே. |
18 | எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். |
19 | வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே.அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். |
20 | நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே.அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. |
21 | நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே.அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. |
22 | எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். |