வேதாகமத்தை வாசி

உபாகமம் 14

                   
புத்தகங்களைக் காட்டு
1நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள்.எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம்.உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.
2ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம்.மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார்.
3தீட்டான எதையும் உண்ணவேண்டாம்.
4நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு,
5வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன.
6மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம்.
7ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம்.ஏனெனில், அவை அசை போடுகின்றன.ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை.அவை உங்களுக்குத் தீட்டானவை.
8பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை: அதுவும் உங்களுக்குத் தீட்டானது.இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்: இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.
9நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.
10சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது.அவை உங்களுக்குத் தீட்டானவை.
11தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.
12ஆனால் பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது:
13கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள்,
14எல்லாவிதக் காகங்கள்,
15நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள்,
16ஆந்தை, கோட்டான், நாரை
17மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி,
18கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன.
19மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை.அவற்றை உண்ண வேண்டாம்.
20தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம்.
21தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம்.ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அன்னியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம்.ஏனெனில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம்.வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம்.
22ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு.
23தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய்.அதனால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய்.
24கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால்,
25நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல்.
26அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக!
27நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே.
28மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை.
29உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அன்னியரும், அனாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர்.அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.