வேதாகமத்தை வாசி

உபாகமம் 32

                   
புத்தகங்களைக் காட்டு
1வானங்களே! நான் பேசுவேன்: செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள்.
2பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக!
3நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்: நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்.
4அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!
5அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்: அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்!
6ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா?
7பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்: அவர் உனக்கு அறிவிப்பார்: பெரியோரிடம் கேள்: அவர்கள் உனக்குச்சொல்வர்.
8உன்னதமானவர் வௌவேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.
9ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே!
10பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்: வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்: அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்: கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.
11கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,
12ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்: வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.
13பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்: வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்: கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்: கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.
14பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.
15ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது: எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்: தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்: தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.
16வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்: அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.
17இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்: அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.
18உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்: உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்”.
19தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.
20அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்: அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்: ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்: நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.
21இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்: அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்: ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.
22எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்: கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்: பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்: மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.
23தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்: என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.
24பசியினால் அவர்கள் வாடுவர்: கொள்ளை நோயால் மாய்வர்: கொடிய வாதைகளால் மடிவர்: விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்: புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.
25வெளியிலே வாள்: உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.
26நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்: அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
27ஆயினும்,”எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!” என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.
28அவர்கள் புத்தி கெட்ட மக்கள்: அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
29அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்!
30ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?
31அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.
32அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்: கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்: அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்: அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.
33அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது: விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.
34இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ?
35பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன: உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்: அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது: அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்: அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.
37அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?
38அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே!
39நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே: உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே: குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.
40ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.
41மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.
42கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்: என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.
43வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்: அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்: அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.
44மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.
45இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது:
46உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
47இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல.அதுவே உங்களது வாழ்வு.யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
48அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:
49மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார்.உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
50சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
51ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய்.அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
52எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய்.அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன்.நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.