1 | மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்: |
2 | அவர் சொன்னது:”இன்று எனக்கு வயது நூற்று இருபது.இனி என்னால் நடமாட இயலாது.மேலும்,”நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்” என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார். |
3 | கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார்.அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார்.நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய்.ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான். |
4 | எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல அவர்களை அழித்தது போல ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். |
5 | ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார்.நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். |
6 | வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார். |
7 | பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு: துணிவுகொள்: இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும்.அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும். |
8 | ஆண்டவரே உனக்குமுன் செல்வார்.அவர் உன்னோடு இருப்பார்.அவர் உன்னை விட்டு விலக மாட்டார்.அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே! |
9 | பின்னர், மோசே இந்தத் திருச்சட்டநூலை எழுதி, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கிற லேவியின் வழி வந்த குருக்களிடமும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார். |
10 | மேலும் மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில், |
11 | உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரயேலர் அனைவரும் அவர் முன்னிலையில் வந்து கூடும்போது, அவர்கள் அனைவரும் கேட்க இத்திருச்சட்ட நூலை அவர்களுக்கு உரக்க வாசியுங்கள். |
12 | மக்களை ஒன்று திரட்டுங்கள்.ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உங்கள் நகரில் வாழும் அன்னியரும் அதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும்.அவர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருக்கட்டும். |
13 | இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும். |
14 | பின்னர் ஆண்டவர் மோசேயிடம்,”நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது.யோசுவாவைக் கூப்பிடு.இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள்.நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும்” என்றார்.அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர். |
15 | ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார்.மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது. |
16 | அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:”நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய்.இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர்.அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர். |
17 | அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும்.நான் அவர்களைக் கைவிடுவேன்.அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன்.அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும்.அந்நாளில் அவர்கள்”நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன” என்பர். |
18 | அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன். |
19 | எனவே, இப்பொழுது நீ இந்தப்பாட்டை எழுது.அதை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக்கொடு.அதை அவர்கள் நாவில் வை.அதனால், இந்தப் பாடலே இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக நான் தரும் சான்றாக விளங்கும். |
20 | ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர்.அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்: என் உடன்படிக்கையையும் மீறுவர். |
21 | பல்வேறு தீங்குகளும் இன்னல்களும் அவர்கள் மேல் வரும்போது, அவர்களுடைய மரபினரின் வாய் பாடலை மறந்து போகாதிருக்கும்.இப்பாடலே அவர்களுக்கு எதிராகச் சான்று பகரும்.ஏனெனில் இப்பொழுதே, அவர்கள் தீட்டியுள்ள திட்டத்தை நான் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுபோகுமுன்பே அறிவேன்” என்றார். |
22 | ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். |
23 | மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:”வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய்.நான் உன்னோடு இருப்பேன் “ என்றார். |
24 | மோசே இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளை ஒரு நூலாய் எழுதி முற்றிலும் முடித்த பின்பு, |
25 | ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த லேவியரை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: |
26 | ”இத்திருச்சட்ட நூலை எடுத்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள்.அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும். |
27 | ஏனெனில், நான் உங்கள் கலகக் குணத்தையும் முரட்டுப் பிடிவாதத்தையும் அறிவேன்.இன்று நான் உங்களுடன் உயிரோடு இருக்கையில், ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள்: நான் இறந்த பின் இன்னும் எவ்வளவு செய்வீர்களோ? |
28 | எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள்.அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன். |
29 | ஏனெனில், நான் இறந்தபின் நீங்கள் கெட்டுச் சீரழிவீர்கள்: நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலிருந்து விலகி, ஆண்டவரின் முன்னிலையில் அருவருப்பானவைகளைச் செய்வீர்கள்.நீங்கள் செய்துகொள்ளும் சிலைகளால் அவருக்குச் சினமூட்டுவீர்கள்.ஆகையால் இறுதிக் காலத்தில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.” |
30 | பின்னர் இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்: |