வேதாகமத்தை வாசி

உபாகமம் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு.ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
2தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து.
3அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே.எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய்.அது துயரத்தின் அப்பம்.ஏனெனில் நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.
4எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது.நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.
5கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.
6ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து.
7கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய்.விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய்.
8ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய்.ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும்.அன்று நீ வேலை ஏதும் செய்யாதே.
9நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள்.விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.
10அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு.அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து.
11கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில், நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும் அன்னியனும் அனாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக.
12நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
13களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய்.
14நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள்.
15ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு.ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்.
16ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும்.புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.
17கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!
18உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய்.அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
19நீதியைத் திரித்துவிடாதே.ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே.கையூட்டு வாங்காதே.ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.
20நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து.அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.
21கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம்.
22சிலைத் தூண்களையும் நிறுத்தாதே.ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.